rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Monday, April 16, 2012

வலிகாமம் வடக்கு - இழந்தவையும் இழப்பவையும்

யாழ்ப்பாணத்தின் முக்கியமான வளங்கள் பொருந்திய பகுதியாக வலிகாமம் பகுதி விளங்குகிறது. அதிலும் பெருமளவு முக்கிய வளங்கள் வலிகாமம் வடக்கு பகுதியிலேயே காணப்படுகிறன. கடல்வளம், நீர்வளம், நிலவளம், பனைவளம், மண்வளம், போன்ற அனைத்து வளங்களையும் கொண்ட பகுதி வலிகாமம் ஆகும். 
கடல் வளம் இங்கு அளப்பரியது. கரையை அண்டி பகுதிகளில் சூடை, நண்டு, சிங்கிஇறால், போன்றனவும், சீலா, வாளை, கும்பிளா, திருக்கை போன்றனவும், தூரகடலில் சுறா, பாரை போன்ற மீன் இனங்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்தவர்களில் பலர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
வடபகுதியில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகம் 1851ல் திறக்கப்பட்டது. 1ம், 2ம் உலகப் போர்க்காலப்பகுதியில் இத்துறைமுக பயன்பாடு அளப்பரியதாக காணப்பட்டது. கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இத்துறைமுகத்தை பாதித்த போதும், இராணுவ ரீதியான பயன்பாட்டுக்காகவும், உணவு, எரிபொருள் விநியோகத்திற்காகவும் இத்துறைமுகம் பயன்படுத்தப்பட்டுவந்தது.

தமிழ்ப் பிரதேசத்தின் ஒரே ஒரு தொழிற்சாலையான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வலிவடக்கில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்த ஓர் தொழிற்சாலையாக காணப்பட்டது. 800 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துபட்ட இத்தொழிற்சாலைக்கு தேவையான முருகைக்கற்கள் இப்பகுதியிலேயே அகழ்ந்து எடுக்கப்பட்டது. யுத்தச் சூழ்நிலையில் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு இதன் உற்பத்தி முயற்சி தடைப்பட்டுப் போய் உள்ளது.
வலிவடக்கில் பெருமளவான பகுதிகள் வயல் பிரதேசமாகவே காணப்படுகிறன. குறிப்பாக தெல்லிப்பழை, அளவெட்டி, அம்பனை, இளவாலை, மாவிட்டபுரம், வசாவிளான், பலாலி ஆகியன குறிப்பிடத்தக்கன. தெல்லிப்பழையும் அளவெட்டியும் இணையுமிடத்தில் அம்பனை வயலும், அளவெட்டியும் சுன்னாகமும் இணையும் பகுதியில் பினாக்கை வயல் வெளியும் காணப்படுகிறன. இங்கு பெருமளவான தானியப் பயிர்கள் விளைகின்றன. கத்தரி, தக்காளி முதலிய காய்கறிகளும், உபஉணவுப் பொருட்களும் சிறப்பாக விளைவிக்கப்படுகின்றன.

பௌதீகவளங்களை விட சிறந்த கல்வி எனும் கொடை இப்பகுதிக்கு இயல்பான ஒன்று. பெரும் அறிஞர்கள் பலரையும், தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என அனைவரையும் உருவாக்கிய மண் எங்களது. அளவெட்டியில் அருணோதயக்கல்லூரி, அருணாசல வித்தியாசாலை, சதானந்தா வித்தியாசாலை, சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாசாலை, தெல்லிப்பழையில் மகாஜனக்கல்லூரி, யூனியன் கல்லூரி, இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம், மாதகல் சென் ஜோசேப் கல்லூரி, வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், குரும்பசிட்டி பொன் பரமானந்தா வித்தியாலயம், மல்லாகம் மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம், மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, வீமன்காமம் மத்திய மகா வித்தியாலயம், கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம், பன்னாலை சேர்.கனகசபை வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், தந்தை செல்வா தொடக்கப்பள்ளி முதலியன புகழ்பூத்த பாடசாலைகளாகும்.

இவற்றில் அனேகமானவை மூன்று தடவைகளுக்கு மேல் இடப்பெயர்வுகளுக்கு உட்பட்டவைகளாகும். இதன் காரணமாக இவற்றின் பெருமளவு சொத்துக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டன. மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வகையில் அனேகமான பாடசாலைகள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளன. அதேசமயம் மீளக்குடியமர அனுமதிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலயம் என்கின்ற தடை காரணமாக பாடசாலைகளும் மக்களும் தடுக்கப்பட்டிருப்பதனால் வேறு இடங்களில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் சில பாடசாலைகள் இயங்கி வருகின்றன. 
கல்வி என்பது ஒருவருக்கு அடிப்படை உரிமையாக இருந்த போதிலும் யுத்தம் காரணிகளால் ஒரு தலைமுறைச் சமுதாயம் அவ்வுரிமைக்குரிய நலன்கள் முழுமையாகக் கிடைக்காத சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
.
.
 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

4 comments:

varanan said...

அட வலிகாமத்தில் இந்தளவு இருக்கா??

gnagobalam said...

good information for me..

habilraj said...

எல்லாம் இருக்கு.. ஆனா ஒண்டும் ஒழுங்கா இல்லயே..

Velmurugan said...

i'm mahajana college old student mr.sriharshan.. i think you also mahajana college student.. am i correct??