rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, November 15, 2011

இலங்கையின் இயற்கை கொடை

15.07.2010 அன்று தெ.மகாஜனக்கல்லூரி மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கராஜவனத்திற்கான கல்விச்சுற்றுலாவின்போது ஏற்பட்ட அனுபவபகிர்வே இது.

நீங்களும் சிங்கராஜாக்கு செல்லலாம். காட்டின் உட்பகுதிக்கு செல்லமுன் ஒரு சிறிய அறிவுறுத்தல். செல்லமுன் உயில் எழுதிவிட்டு செல்லவும்.

காட்டுக்கு சென்ற குழு

சரத் கொட்டகமவுடன் நான்

கடந்த மூன்று வருடங்களாக இச்செயற்திட்டம் இடம்பெற்ற போதும் இரண்டாவது வருடமே தமிழ் பாடசாலைகளுக்கு இவ் அனுமதி கிடைத்தது. இதிலே யாழ் மாவட்டத்திலிருந்து முதலாவது பாடசாலையாக நாம் சென்றிருந்தோம். இதற்கு வடக்கு கிழக்கு இணைப்பாளர் திரு அசோகன் அவர்கள் பெரிதும் உதவிபுரிந்தார்.
15.07.2010 காலை யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.00 மணிக்கு ஆரம்பித்த பயணம் பளை - பரந்தன் - முறிகண்டி - ஓமந்தை வழியே வவுனியா வந்து கொஞ்சநேரம் நின்று மீண்டும் 10.45 மணியளவில் கலவான நோக்கி பயணப்பட்டு சிங்கராஜவின் ஆரம்பத்தை இரவு 8.15 அளவில் அடைந்தது. 


இதிலிருந்தே தடைசெய்யப்பட்ட காடு ஆரம்பமாகிறது. யாரும் உட்புகமுடியாத இடம்.(எம்மை தவிர)

 சிங்கராஜவை அடைந்த பின் பின்னர் காட்டின் நடுவே அமைந்த தங்குமிடத்தை அடைவதற்கான பயணத்தை ஆரம்பித்தோம். முன்னரே ரோச் லைட் கொண்டு வரும்படி அறிவித்ததால் நடைபயணம் இலகுவாக அமைந்தது. சலசலக்கும் நீர்வீழ்ச்சி, பலவித உயரங்களிலமைந்த மரங்கள், என்ன விலங்கின் ஒலி, பறவையின் ஒலியென்று கண்டுபிடிக்க முடியாதவாறு பலவித ஒலிகளும் பயத்தை ஏற்படுத்தின. எமக்கு தக்க உதவிகளை செய்து ஆலோசனைகள் வழங்கிய அசோகன் (வடக்கு கிழக்கு இணைப்பாளர்) வழிகாட்டியாய் எமக்கு உதவிய பிரதீப் சுரங்க (Education Officer, Field Ornithology Group of Srilanka, Colombo University) போன்றோர் எம்முடன் வந்து நீர்வீழ்ச்சிகளை பற்றியும், ஒலிகளை வைத்து பறவை, விலங்கை இனங்காணும் முறைகளை விளக்கினர்.கிட்டத்தட்ட 4Km சென்றபோது மரத்தாலே செய்யப்பட்ட 2 மாடிகட்டடம் தென்பட்டது. கொங்கிறீட் கட்டடத்தை விட அழகாகவும் உறுதியாகவும் அமைக்கப்பட்ட அந்த வீட்டை என்றும் மறக்கமுடியாது.மேலும் 6-7Km மலைப்பாதையில் நடந்து தங்குமிடத்தை அடையும் போது எமக்கு என்றும் மறக்கமுடியாத அனுபவம் ஏற்பட்டது. அங்கு மிகபெரிய சூழலியல் விஞ்ஞானியான சரத் கொட்டகம(Professor of Environmental Science, Department of Zoology, University of Colombo.) எமக்காக காத்திருந்தார்.அன்று இரவு உணவை முடித்ததும் விரிவுரை ஆரம்பம் ஆனது. முதல்ல சொன்னது காலை 5.00 மணிக்கு எழும்பி 6.00 மணிக்குள்ள விரிவுரைக்கு வரவேணுமிண்டுறதுதான். அடுத்தநாள் 


16.07.2010 எமது வேலை ஆரம்பமானது. காலை விரிவுரையில கொட்டகம சேர் காடழிப்பை தடுப்பதன் அவசியத்தையும் நாம் செய்யவேண்டிய காரியங்களையும் கூறினார். பிறகு எமக்கென்று அமைக்கப்பட்ட உடைகளை அணிந்து காட்டுக்குள் புறப்பட்டோம். அட்டை (ரத்தம் உறுஞ்சும் அட்டை) கடியை தடுப்பதற்கு விசேடமாக அமைக்கப்பட்ட காலுறைகளை அணிந்து புறப்பட்டோம். அன்று நீர்வீழ்ச்சிகளை, புது வித பூக்கள், பாம்பு, பறவை என்பவற்றை பார்வையிட்ட படி சிங்கராஜவின் MULAWELLA NATURE TRAIL ல் கிட்டத்தட்ட 700m க்கு மேல் ஏறினோம். உயிருக்கு ஆபத்தான பாதை. ஏனெனில் குத்தான சாய்வு பாதை. மேலும் அதிகளவு மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் 760m க்கு செல்லாமல் 700m உடன் திரும்பினோம். அசோகன் சேரிடம் மேலே என்ன உள்ளதென கேட்டபோது கட்டையான மரங்களும் கற்பாறைகளும் காணப்படுமென கூறினார். மேலும் இச்சிகரத்தில் நின்று வடமேற்கே பார்த்தால் புத்தளம் வெளிச்ச விளக்கு தெரியுமெண்டது இப்பவும் நம்பமுடியாமலிருக்குது. பிறகு தங்குமிடம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். பிறகு அன்றைய தினத்தை விரிவுரையுடன் கழித்தோம்.


17.07.2010 சனிக்கிழமை பறவைகளின் நடத்தை கோலங்களை ஆராய்வதற்காக சென்றோம். பலவிதமான பறவைகளை கண்டதுடன் Sarath Kumaragae (Forest Officer,Forest Department, Sinharaja Forest) அவர்களின் காடழிப்பை தடுப்பது, சிங்கராஜவனத்தின் வரலாறு, அங்கு காணப்படும் கிராமவாசிகளின் செயற்பாடு பற்றி விரிவுரை இடம்பெற்றது. மீண்டும் பறவைகளை பார்வையிட அதற்கென காணப்படும் மலையில் ஏறினோம். அங்கு லால் (B.Sc, Research Officer of Field Ornithology Group of Srilanka, Zoology Department, Colombo University) அவர்கள் பறவைகளை இனம்காணல் பற்றியும் அவற்றின் நடத்தை பற்றியும் அறிவுறுத்தினார். ஆங்கே பல பறவைகளை பார்வையிட்டு திரும்பும் வழியில்; GIANT NAWADA TREE ஐ பார்வையிட்டோம். தமிழில் இது ராட்சத குங்கிலிய மரம் எனப்படும். 43m உயரமானது. இந்த வகை மரமே உலகிலே உயர்ந்த மரத்தின் வகையை சேர்ந்தது. 6.3m சுற்றளவு கொண்டது.அதன்பின் அங்கே காணப்படும் வானிலை அவதானநிலையமும் மீன் வளர்ப்பு நிலையமும் அமைந்த கட்டடதொகுதிக்கு சென்றோம். அங்கே சிறிது நேரம் அவ்அவதான நிலையத்தின் செயற்பாடு பற்றியும் அதுவரை பார்த்த விலங்குகள் பற்றியும் கதைத்தோம்.மாலையில் மீண்டும் களபயணத்தில் பாம்பு, பறவை போன்றவற்றை பார்த்தபடி மலையேறினோம் தொடர்ச்சியான மழைக்கிடையே எமது களபயணத்தை சிறப்பாக முடித்து மாலையில் செயற்திட்டம் செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டோம். அதுவரை கண்ட, கேள்விப்பட்ட விடயங்களை செயற்திட்டத்தில் பதிந்து 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை சரத்.கொட்டகம அவர்களிடம் சமர்ப்பித்தோம். அதன் பின் இக்கல்விபட்டறையில் கலந்து கொண்டமைக்காக இலங்கை களப்பறவையியல் குழவினால் வழங்கப்படும் சான்றிதழுடன் சூழல் பாதுகாப்பு நல்லெண்ண தூதுவர்கள் என்ற பட்டத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.

ஸ்ரீலங்கா புளூ மக்பீ பறவை
GIANT NAWADA TREE

இரத்தம் உறுஞ்சும் அட்டை. முதலில் சிறிதாயிருந்தது இரத்தம் குடித்தபின் எவ்வளவு மொத்தமானது என்று பார்க்கவும்.

இனி சிங்கராஜ பற்றிய விளக்கம் இதோ.......
சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300m தொடக்கம் 1170m உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும். ஆனால் பயணிகள் தங்குமிடத்திலிருந்து குறிப்பிட்ட இளவு தூரமே செல்லமுடியும். இது 1876 ல் ஒதுக்கப்பட்ட வனமாக பிரித்தானிய அரசால் அறிவிக்கப்பட்டது. இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க 
அரசிதலின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. 1960 ல் ஏற்பட்ட மரதேவைக்காக 35% வனப்பகுதி இங்கு அழிக்கப்பட்டது. ஆனாலும் மீளவனமாக்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது.ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1977ல் ஜெயவர்த்தன சிங்கராஜவில் குறிப்பிட்ட பகுதியில் மரங்களை வெட்ட அனுமதியளித்தார். அப்பகுதியில் மீள்காடாக்கம் இடம் பெற்றது. இதன் மூலம் தேவையற்ற மரங்கள் நீக்கப்பட்டன.1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528.14 அரசியல்யாப்பின் படி, 7,648.2 ஹெக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 ஹெக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 ஹெக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 ஹெக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்ததுஇது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனப்பகுதியில் ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே தொடக்கம் யூலை வரை தென்மேற்குப் பருவப் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவப் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீட்டர் மழை இங்கே பொழிகின்றது. இங்கு திசையறி கருசிகள் வேலைசெய்யாது. இப்பகுதியில் காந்தவிசை காணப்படாததே இதற்கு காரணம்.

இங்கு காணப்படும் விலங்கு வகைகள் சில- 
Bees-148 வகை
Dragonflies-120 வகை
Amphibious – 44 வகை
Ants- 181 வகை
Birds-492 வகை (33 இலங்கைக்குரிய வகைகள்)

17% Amphibious காடழிப்பால் அழிவடைந்து விட்டது. எஞ்சியவற்றில் 4% சிங்கராஜவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது.

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

2 comments:

faris said...

I registerd in this site. but i cant work in it.
pls tell me how can work?

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ssharshan said...

பெரும்பாலும் இணையதளங்கள் மூலம் பதிவு செய்யப்படும் வேலைகளினை இலகுவாக செய்ய முடியாது... எனவே இதில் காலம் கடத்துவது வீண்.